ரஷ்ய றொசரொம் அரச கூட்டுத்தாபன பிரதிநிதிகள் - ஜனாதிபதி சந்திப்பு January 18, 2018

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் ரஷ்ய றொசரொம் அரச கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் [Russian State Corporation ROSATOM] ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் றொசரொம் நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் நிகொலாய் ஸ்பாஸ்கி உள்ளிட்ட ஐந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இலங்கையின் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத் துறையின் முன்னேற்றத்திற்கு புலமைப்பரிசில்களை வழங்குதல் மற்றும் மின்சக்தி, கைத்தொழில், விவசாயம் போன்ற பல துறைகளில் இருநாடுகளுக்கிடையில் கூட்டுறவை மேம்படுத்தும் நோக்குடன் இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

மின்சக்தி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆய்வு அமைச்சுகளுடன் இணைந்து இதற்காக நீண்டகால, குறுங்கால நிகழ்ச்சித் திட்டங்களை தயாரிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்துவரும் உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ரஷ்யா இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளை பாராட்டினார்.

குறிப்பாக அண்மையில் தேயிலை ஏற்றுமதி தொடர்பில் எழுந்த பிரச்சினையை உடனடியாக தீர்த்து இலங்கை நாட்டிற்கும் மக்களுக்கும் வழங்கிய இதய பூர்வமான ஒத்துழைப்பு குறித்து ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினிக்கு ஜனாதிபதி தனது விசேட நன்றியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெடரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.