பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும்! January 7, 2018

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்று நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி தீபிகா உடகம தெரிவித்து ஒரு நாள் கடப்பதற்குள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 11 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவர் நிரபராதி எனத் தெரிவித்து நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மிக மோசமான விளைவுக்குக் கிடைத்த ஆகப் பிந்திய உதாரணம் இது.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளமை, பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளை நிலைநிறுத்துகின்ற பாதுகாப்புச் சட்டமாக மாற்றியமைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இருப்பதாகவும் அதன் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மட்டுமல்ல பன்னாட்டு மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் அமைப்புக்கள் பல வும்கூட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறே கொழும்பு அரசிடம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் 2015ஆம் ஆண்டு கொழும்பின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பன்னாட்டுச் சட்டங்களை உள்ளடக்கிய புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது.

அவ்வப்போது இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் ஆய்வு செய்யும் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்களில் பலரும்கூட காலத்திற்குப் பொருந்தாத, இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் மனித உரிமைக் குழுக்களின் அழுத்தம் என்பவற்றை அடுத்து, இந்த விடயத்தில் சாதகமாக நடப்பதாகவே அரசும் காட்டிக்கொண்டது. புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

புதிய சட்ட மூலத்துக்கான வரைவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது . ஆனால், அது ஏற்கனவே இருக்கும் சட்டத்தை விட மிக மோசமானதாக இருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.

இதையடுத்து அந்தச் சட்டமூலம் விவாதத்துக்கு எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. எனினும் திருத்தப்பட்ட சட்டவரைவு மீண்டும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட வில்லை. காலம் இழுத்தடிக்கப்படுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் இலங்கையில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே இன்று, இந்த நிமிடம் வரைக்கும் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் தமிழர்களே!

போர் முடிந்து 8 ஆண்டுகளாகிவிட்ட பின்னரும் , அரச படையினருக்கோ, அரசுக்கோ எதிராக எவராவது, ஏதாவது செய்துவிட்டால் தமிழர்களுக்கு எதிராக உடனடியாகச் சட்டம் ஒழுங்கு அதிகாரிகளால் கையில் எடுக்கப்படுவது பயங்கரவாதத் தடைச்சட்டமே.

கைது செய்யப்பட்டவரை விசாரணை ஏதும் இன்றித் தடுத்து வைக்கவும் , சித்திரவதை செய்து பெறப்படும் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்றுக்கொள்ளவும், நீண்ட காலமாகப் பிணையில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கவும் என ஏகப்பட்ட அதிகாரங்களைப் பொலிஸாருக்கு வழங்கும் இந்தச் சட்டம், ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தைத் தொட்டுச் சென்றாலும், அதனால் அறிக்கை மட்டுமே விடுக்க முடியும். அதனைத் தாண்டி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ள அதனால் முடியாது.

எனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான போராட்டங்களையும் தமிழ்ச் சமூகமே முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.

தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலமும், தொடர்ச்சியாகக் கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமும் மட்டுமே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எம்மால் ஒழிக்க முடியும்.