முதலமைச்சரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை : முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் January 25, 2018


வவுனியா மாகாறம்பைக்குளத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளூராட்சி சபை வேட்பாளர்களுக்கான அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது,வடமாகாண முதலமைச்சரை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் தெரிவித்தார்.


எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கோடிக்கணக்கான ரூபாயை அரசியல் இலஞ்சம் பெற்றிருப்பதாகவும், கொள்கை ரீதியாக எமது கட்சி தேசியக்கட்சிகளிடம் சோரம் போய்விட்டது என்ற குற்றச்சாட்டை சிவசக்தி ஆனந்தன் முன்வைத்துள்ளார்.

சிவசக்தி ஆனந்தனுடன் போராட்ட காலத்தில் 35 வருடங்களாகவும் அரசியலில் 18 வருடங்களாகவும் ஒன்றாக பயணித்திருக்கிறோம். அவ்வாறிருக்க இந்த விடயத்தில் அவர் ஏன் ஒரு முதிர்ச்சி இல்லாத சின்னப் பிள்ளை போல் செயற்படுகின்றார் என தெரியவில்லை.

அபிவிருத்தி விடயங்களுக்காக அளிக்கப்படுகின்ற நிதி அரசியல் இலஞ்சமாக பார்க்கப்படும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

முதலமைச்சர் கூட்டமைப்பின் முலம் இப்பதவியை பெற்றுவிட்டு தற்போது கூட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு இருப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

முதலமைச்சர் விடுதலைக்காக போராடிய இயக்கங்களை வன்முறையாளர்கள், தீண்டத்தகாதவர்கள் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது என்று கூறினாரோ அன்றிலிருந்து நான் ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தை சேர்ந்தவன் என்ற ரீதியில் அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு தேடி பிரச்சாரம் செய்கின்றார். ஆனால் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த கூடுதலானவர்கள்.

ஆனால் ஜனாதிபதி தனது கட்சிக்காக முழுமையான விசுவாசத்துடன் செயற்படுகின்றார். அதேபோல் பிரதமர் மற்றும் மாகாண முதலமைச்சர்கள், அமைச்சர்கள் தங்களது கட்சிக்காகதான் பிரச்சாரம் செய்கின்றார்கள்.

அது கூட்டு அரசாங்கமாக இருந்தாலும் கூட தங்களது கட்சிக்காகதான் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் வடக்கில் மாத்திரம்தான் விசித்திரம், எங்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் நியமித்த முதலமைச்சர் ஏறி வருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற வீடு தேவை. தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு முதலமைச்சர் காட்டும் தயக்கம் அதன் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை என தெரிவித்தார்.